பர்த்ருஹரி மஹ்தாப் முகநூல்
இந்தியா

மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப்! பதவியேற்றபோது எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

நாடாளுமன்ற மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்ற போது காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு காரணம் என்ன? வாருங்கள் பார்ப்போம்...

PT WEB

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மரபுப்படி தற்காலிக சபாநாயகர் நியமனம் நடைபெற்றது. ஏழு முறை எம். பி.யாக தேர்வான பர்த்ருஹரி மஹ்தாபை 18 ஆவது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய உறுப்பினர்களுக்கு பர்த்ருஹரி மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின், வரும் புதன்கிழமை அன்று மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்தலை அவர் நடத்துவார். இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக மஹ்தாப் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எட்டு முறை எம்.பி.,யாக தேர்வான கொடிக்குன்னில் சுரேஷை அந்தப் பதவிக்கு நியமிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மரபுகளை அழித்துவிட்டதாக தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்தப் பதவில் ஜெய்ராம் ரமேஷ் “மஹ்தாப் 7 முறை தொடர்ச்சியாக எம்.பி.யாக தேர்வானவர் என்ற வாதத்தை பாஜக முன்வைக்கும் பட்சத்தில், மற்றொரு பாஜக எம்.பி.யான ரமேஷ் ஜிகஜிநாகியை ஏன் அந்த பதவிக்கு நியமிக்கவில்லை, சுரேஷை போல அவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஓரங்கட்டப்பட்டாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூணாவாலா, ”காங்கிரஸ் கட்சி முதலில் சுரேஷை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கட்டும். உண்மையிலேயே கொடிக்குன்னில் சுரேஷின் அரசியல் எதிர்காலம் குறித்து காங்கிரஸூக்கு அக்கறை இருந்தால், அவரை மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவே அல்லது 2026-ல் கேரளாவில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவே களமிறக்குங்கள். தற்காலிக பதவிக்காக ஏன் காங்கிரஸ் இவ்வளவு அழுத்தம் தர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “மக்களவைக்கு தொடர்ந்து ஏழு முறை தேர்வானதால், தற்காலிக சபாநாயகர் பதவிக்கு மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டார். கொடிக்குன்னில் சுரேஷ் எட்டு முறை தேர்வானாலும் இடையே 1998, 2004-ல் தேர்வாகவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார்.

கிரண் ரிஜிஜூ

இதனைத் தொடர்ந்து மக்களவையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், I.N.D.I.A. கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன், அரசியல் சாசன பிரதிகளை சுமந்தபடி கலைந்து கொண்டனர்.