பாரத் ரத்னா விருது பெறுபவர்கள் PT
இந்தியா

பிவி நரசிம்மராவ்,சவுத்ரி சரண் சிங்,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு சமீபத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

PT

இரண்டு முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்மராவ் மற்றும் சவுத்ரி சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். முன்னதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு சமீபத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு :

தமிழகத்தை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். “ விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் சுவாமிநாதன். சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தார்” என்று பிரதமர் மோடி இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு :

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9ஆவது பிரதமராக பதவி வகித்தவர் நரசிம்ம ராவ்.

”சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தார். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழிநடத்தியது ” என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ”நாட்டிற்கு சரண் சிங் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. 1979 முதல் 1980ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 5-ஆவது பிரதமராக இருந்த சவுத்ரி சரண் சிங் விவசாயிகளின் உரிமைகள், நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எந்தப் பதவியில் இருந்தாலும் தேசத்தைக் கட்டியெழுப்ப சரண் சிங் உத்வேகம் அளித்தார்” என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஜாட் சமூகத்தை சேர்ந்த சரண் சிங் அம்மாநில முதல்வராகவும் இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.