இந்தியா

கோவேக்சின் தடுப்பூசி அனுமதியில் நெருக்கடியா? - பாரத் பயோடெக் நிறுவனம் சொல்வது என்ன?

கோவேக்சின் தடுப்பூசி அனுமதியில் நெருக்கடியா? - பாரத் பயோடெக் நிறுவனம் சொல்வது என்ன?

JustinDurai

கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தம் காரணமாகவே விரைவாக அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் 'கோவாக்சின்' தடுப்பூசி தயாரித்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தன. மேலும் தடுப்பூசியின் 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம்  முற்றிலும் மறுத்து உள்ளது. இதேபோல் பாரத் பயோடெக் நிறுவனமும் கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என தெளிவுபடுத்தி உள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவிலும் உலக அளவிலும் கொரோனாவை கட்டுப்படுத்தி மனித உயிர் மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவதற்கான கடமை எங்களிடம்தான் இருந்தது.

உலகளவில் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட தடுப்பூசிகளில் கோவேக்சினும் ஒன்று. இது 3 கட்ட சோதனைகள் மற்றும் 9 மனித மருத்துவ ஆய்வுகள் உள்பட 20 மருத்துவ ஆய்வுகளில் மதிப்பீடு செய்யப்பட்டது. மற்ற எந்த இந்திய தடுப்பூசிகளையும் விட இது அதிகம் . இந்த சோதனைகளில் கோவேக்சினின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தெளிவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது'' என பாரத் பயோடெக் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

இதையும் படிக்கலாமே: 53 வயது நபரின் சிறுநீரகத்தில் கால்பந்து சைஸ் கட்டி - வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்