சுசனா சேத் ட்விட்டர்
இந்தியா

ஐலைனர் மூலம் 6 வரிகளில் கடிதம்.. டிரைவர் சொன்ன சீக்ரெட்.. சிஇஓ மகனின் கொலையில் வெளியான புதுதகவல்!

பெங்களூரு சி.இ.ஓ. தன் மகனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பல புதிய தகவல்கள் வந்துகொண்டே உள்ளன.

Prakash J

மகனைக் கொலை செய்த பெங்களூரு சி.இ.ஓ.

பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுசனா சேத். இவர் கடந்த ஜன.6ஆம் தேதி, அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கிருந்து பெங்களூரு திரும்பிய சமயத்தில், தனது மகனைக் கொலைசெய்து பெரிய பேக் ஒன்றில் கொண்டுசென்றபோது சிக்கிக்கொண்டார். கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள அவரை ஆறு நாள் போலீஸ் காவலில் வைக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது. பெற்ற மகனை கொலைசெய்த பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அதன் விசாரணையில் பல புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சி.இ.ஓ.வை அழைத்துச் சென்ற கார் ஓட்டுநர் பேட்டி

அந்த வகையில், தற்போது அவரைக் கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்ற கார் ஓட்டுநர் ஜான், ’காரில் சுசனா சேத் அமைதியாகவே இருந்தார்’ எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”கோவா ஹோட்டல் ஊழியர்கள் முன்பதிவு செய்திருந்தபடி நான், காரைக் கொண்டு வந்து வரவேற்பறைக்கு முன்பு நிறுத்தினேன். அப்போது பெரிய பேக்கை எடுத்துவந்த சுசனா சேத், என்னைப் பார்த்து, அந்த பேக்கைக் கொண்டுபோய் காரில் வைக்கும்படி கூறினார். அது மிகவும் கனமாக இருந்தது. அப்போது நான், ‘மேம் பேக் ரொம்ப வெயிட்டா இருக்கு. அதிலிருந்து சில பொருட்களை எடுக்கலாமா’ எனக் கேட்டேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதனால், அந்த பேக்கை என்னால் தூக்க முடியால் இழுத்துச் சென்று காரில் வைத்தேன். அதன்பிறகு வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் பகுதிக்கு கார் வந்தபோது, ’ஒரு பாட்டில் தண்ணீர் வேண்டும்’ எனக் கேட்டார். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 10 நேரம் பயணத்தில் இருந்தபோதும் அவர் ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார்.

போனில் தகவல் தெரிவித்த போலீசார்!

அப்போது கர்நாடகா - கோவா எல்லையில் உள்ள சோர்லா காட் பிரிவில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீசாரிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‘போக்குவரத்து சீரமைக்க குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும்’ என்றனர். இதைக் கேட்ட நான், சுசனாவிடம் ‘வேண்டுமானால் நான் உங்களைத் திரும்பக் கொண்டுபோய் விமான நிலையத்தில் விடவா’ எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘வேண்டாம். நேரம் ஆனாலும் பரவாயில்லை; சாலை வழியாகவே செல்லலாம்’ என்றார். அப்போதே நான் இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். அப்போதுதான் போலீசாரிடமிருந்து எனக்கு போன் வந்தது. ’தாங்கள் அழைத்துச் செல்லும் பயணியின்மீது சந்தேகம் உள்ளது’ எனத் தெரிவித்த அவர்கள், ’அவரை கலங்குட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என என்னிடம் கூறினர்.

இதனால் நான் அந்த இடத்தை Google Maps மற்றும் GPSஇல் தேடினேன். ஆனால் அந்த இடம் காட்டப்படவில்லை. இதனால் நான் சுங்கச்சாவடிகளில் போலீசார் யாராவது நிற்கிறார்களா எனத் தேடினேன். அங்கு யாரும் இல்லை. பின்னர் நான், பெங்களூருவில் இருந்து ஒன்றரை மணி நேரம் தொலைவில் இருந்த ஐயமங்களா காவல் நிலையத்தில் கொண்டுபோய் காரை நிறுத்தினேன். அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 15 நிமிடம் கழித்து வெளியே வந்தார். அவர் வரும்வரை சுசனா சேத் அமைதியாகவே இருந்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் வந்து அவரது பேக்கை சோதனையிட்டார். அதில் குழந்தையின் உடல் இருந்தது. ’அது உங்கள் மகன்தானா’ என சுசனாவிடம் இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு, அவர் 'ஆம்' என்று பதிலளித்தார்” என கார் டிரைவர் ஜான் தெரிவித்துள்ளார்.

ஆறு வரிகளில் ஐலைனர் மூலம் எழுதிய கடிதம்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சுசனா, ஆறு வரிகளில் ஐலைனர் மூலம் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி உள்ளனர். அதில், ‘நீதிமன்றமும், ஒருபக்கம் கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றன. இனிமேலும் இதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர்.

தவறான பழக்கங்களை என் மகனுக்குக் கற்பிக்கிறார். ஒருநாள்கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை’ என்று அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இருமல் மருந்து கொடுத்து மகனை தூங்கவைக்க, சுசனா தாலாட்டும் பாடியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: காதலில் விழுந்த புருனே இளவரசர்.. மன்னர் வம்சாவளி அல்லாத பெண்ணை கரம் பிடித்து ஒரேநாளில் வைரல்!