ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அடுத்த வாரம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் தனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யவும் அவர் வழக்கில் கேட்டுக்கொண்டுள்ளார். டி.என்.ஏ பரிசோதனைக்காக மறைந்த ஜெயலலிதாவின் உடலையும் மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதால் இத்தனை வருடங்கள் உண்மையை கூறவில்லை என்றும், தனது வளர்ப்புத் தந்தை கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டதால் தற்போது உண்மையை கூறுவதாகவும் வழக்கில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் எனவும் அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார். அம்ருதாவின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுவை பெங்களூர் நீதிமன்றத்தில் அம்ருதா தாக்கல் செய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதாவின் மகன் என கூறி ஒருவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.