இந்தியா

தாயை கொன்றுவிட்டு அந்தமான் சுற்றுலா சென்ற இளம் பெண் - பின்னணியில் அதிர்ச்சி !

jagadeesh

பெங்களூரில் தாயை கொன்றுவிட்டு இளம் பெண் ஒருவர் சில மணி நேரங்களிலேயே தன்னுடைய நண்பர்களுடன் அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா சென்றது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் அம்ருதா, இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். இவருக்கும் தாய் நிர்மலாவுக்கும் இடையே பிப்ரவரி 2 ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தனது தாயையும், தம்பியையும் கடுமையாக தாக்கியுள்ளார் அம்ருதா. இதில் உச்சக்கட்டமாக கத்தியை எடுத்து தனது தாயை குத்தியுள்ளார். இதில் நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது தாய் இறந்து சில மணி நேரங்களிலேயே அம்ருதா தனது நண்பர் ஸ்ரீதர் ராவுடன் அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அம்ருதாவின் தாக்குதலில் காயமடைந்த அவரது தம்பி, காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரிந்தவுடன் பெங்களூர் போலீஸார் உடனடியாக அந்தமான் சென்று அம்ருதாவையும், அவரது நண்பரையும் கைது செய்தனர். காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவலை அம்ருதா பகிர்ந்துள்ளார். இது குறித்து மகாதேவபுரம் காவல் மாவட்டத்தின் துணை ஆணையர், அனுசேத் கூறும்போது "இந்தக் கொலையில் பல குழப்பங்கள் இருக்கிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விசாரணையில் வெளி வரும் தகவல்கள் ஜீரணிக்க கூடியதாக இல்லை. அந்த இருவரும் பெங்களூர் வந்த பின்புதான் முழு விவரங்கள் தெரிய வரும். அம்ருதாவின் தம்பி கூறும் காரணங்களும், விசாரணையில் தெரிய வரும் காரணங்கள் முரணாக இருக்கின்றன" என்றார் அவர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், அம்ருதா குடும்பத்துக்கு கடன் பிரச்னை இருந்துள்ளதாக தெரிகிறது. 2013 ஆம் ஆண்டு அம்ருதாவின் தந்தை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் அம்ருதாவின் குடும்பம் கடன் வாங்கியிருந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துவிட்டார். உரிய நேரத்தில் கடனை மீண்டும் கட்ட முடியாததால், ரூ.18 லட்சமாக கடன் உயர்ந்துள்ளது. இந்தக் கடனில் இருந்து மீள முடியாமல் அம்ருதாவின் குடும்பம் தத்தளித்துள்ளது.

இதனால் மணமுடைந்த அம்ருதா தன் தாயையும், தம்பியையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். அதற்கு முன்பு தன் ஆண் நண்பருடன் சுற்றுலா சென்று வந்துவிடலாம் என தீர்மானித்திருந்தார். அதேபோலவே தாயை கொன்றுவிட்டு தன் ஆண் நண்பருடன் பிப்ரவரி 2 ஆம் தேதி அந்தமான் பறந்தார் அம்ருதா. அம்ருதா செய்த கொலையும் தற்கொலை முடிவும் அவரது ஆண் நண்பருக்கு தெரியாது என்று காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் தாயை கொன்றுவிட்டு மகள் அந்தமான் சுற்றுலா சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.