ராமேஸ்வரம் கபே, என்.ஐ.ஏ. ட்விட்டர்
இந்தியா

பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு – குற்றப்பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களுர் ஒயிட் பீல்டு அருகே ப்ரூக்பீல்டில் ராமேஸ்வரம் கபே உணவகம் உள்ளது. இங்கு கடந்த மார்ச் 1ம் தேதி குண்டு வெடித்தது. இதில், ஹோட்டல் ஊழியர்கள் உள்பட ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் அப்துல் மசிம் தாஹா, ஷாரிக், அரபாத் அலி, மாஸ் முனீர், முஷாபீர் ஷெரிப், முஜாவிர் ஹூசைன் ஆகிய ஆறு பேரை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.

பெங்களூரு கஃபே

இதையடுத்து கடந்த செப்டம்பர் 9ம் தேதி குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கைதான பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த சில பயங்கரவாதிகளுடனும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குற்றப்பத்திரிகையில், ‘பயங்கரவாதிகளில் நான்கு பேர், ஐ.எஸ்., அமைப்பின் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். வெடிகுண்டு தயாரிக்க ஆன்லைன் மூலம் ஐ.எஸ்., அமைப்பிடம் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு ஐ.இ.டி., வெடிகுண்டு தயாரிக்க ஒரு வாரம் ஆகியுள்ளது. வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை டார்க் வெப் இணையம் மூலம் வாங்கி உள்ளனர்

பெங்களூரு நகரில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டுவெடிப்பு

எங்கு வைக்கலாம் என்று இடம் பார்த்துவிட்டு, வெடிகுண்டை தயாரித்துள்ளனர். ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு அன்று, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால், குண்டு வைக்கும் திட்டம் தோல்வி அடைந்தது. இதனால் ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டு வைத்துள்ளனர்’ - என்று கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நான்கு பயங்கரவாதிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்று வெடிகுண்டு தயாரித்ததும் தெரியவந்துள்ளது.