இந்தியா

பெங்களூருவில் 2 கோடி கேட்டு மிரட்டல்... கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சிறுவன்

பெங்களூருவில் 2 கோடி கேட்டு மிரட்டல்... கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சிறுவன்

webteam

பெங்களூரு நகரின் மத்தியப் பகுதியில் உள்ள சிவாஜிநகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் முஹம்மது உமர். வியாழன்று மாலை தெருவில் விளையாடிய சிறுவனை, பட்டம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றனர். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சிறுவனை மீட்டுள்ளது மக்களால் பாராட்டப்படுகிறது.

சிறுவனைக் கடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவாஜி நகர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை பட்டம் வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, 70 கி.மீ தொலைவில் உள்ள தும்கூருக்கு கடத்திச் சென்றுள்ளனர். கடத்தல் கும்பல் தலைவன், அந்தச் சிறுவனின் தந்தைக்குப் பேசி 2 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே மகனை விடுவிக்கமுடியும் என்று மிரட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



மகன் உயிருடன் திரும்பவேண்டும் என்றால், காவல்துறையில் புகார் செய்யக்கூடாது என கடத்தல் கும்பலின் தலைவன் மிரட்டிய நிலையிலும், சிறுவனின் தந்தை உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பெங்களூரு காவல்துறை சிறப்புக் குழுவினர், தும்கூரில் கடத்தல் கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

"சிறுவனைக் கடத்திய கும்பலின் தலைவன் ஏற்கெனவே தொழிலதிபரான சிறுவனின் தந்தைக்கு அறிமுகமானவர். அவரே 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் கடத்தல் நாடகத்தை தன் 5 நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார்" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.