இந்தியா

மசூதிகள், கோவில்களில் ஒலிபெருக்கி சத்தத்துக்கு கட்டுப்பாடு - பெங்களூரு காவல்துறை

மசூதிகள், கோவில்களில் ஒலிபெருக்கி சத்தத்துக்கு கட்டுப்பாடு - பெங்களூரு காவல்துறை

Veeramani

ஒலிபெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவிற்குள் பயன்படுத்துமாறு 301 மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு பெங்களூரு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இது தொடர்பாக பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பந்த், " ஒலி மாசு தொடர்பாக 59 பப்கள், பார்கள் மற்றும் உணவகங்களுக்கும், 12 தொழிற்சாலைகளுக்கும், 83 கோவில்களுக்கும், 22 தேவாலயங்களுக்கும், 125 மசூதிகளுக்கும் என மொத்தம் 301 இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்



முன்னதாக, சில வலதுசாரி ஆர்வலர்கள் ஒலி மாசு விதிகளை மீறும் ஒலிபெருக்கிகளை தடை செய்யுமாறு மாநிலம் முழுவதும் உள்ள கமிஷனர்கள் மற்றும் பிற போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஜாமியா மஸ்ஜித் சிட்டி மார்க்கெட் இமாம் மௌலானா மக்சூத் இம்ரான் ரஷிதி, " ஒலி அளவு கட்டுப்பாடு தொடர்பாக பல மசூதிகளுக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளது. ஒலி அளவை பராமரிக்குமாறு எங்களிடம் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒலி அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டாதபடியும், யாருக்கும் இடையூறு ஏற்படாமலும் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் ஒலி அளவு கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்தத் தொடங்கியுள்ளோம். கோவில்களுக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் வந்துள்ளது. நாம் அனைவரும் விதிமுறைகளை பின்பற்றினால் பிரச்னை இருக்காது. " என தெரிவித்தார்



இதற்கிடையில், ஒலிபெருக்கி விவகாரத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார். மேலும், டெசிபல் மீட்டர் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு மசூதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து ஒலிபெருக்கிகளுக்கும் உரியது என்று கூறினார்.

முன்னதாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக வகுப்புவாதப் பிரச்சினைகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி சமுதாயத்தைக் கையாள்வதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியிருந்தார்.