பெங்களூரு படம் எக்ஸ் தளம்
இந்தியா

பெங்களூரு| வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு.. தனக்கேற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்த பிரபல தொழிலதிபர்!

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது ஜிடி மால். இங்கு முதியவர் ஒருவர் வேட்டி கட்டி வந்ததற்காக அவருக்கு அனுமது மறுக்கப்பட்டது சர்ச்சையானது. திரைப்படத்திற்காக முன்பதிவு செய்திருந்தும் அனுமதி மறுக்கப்பட்டு, அவரும் அவரது மகனும் வாயிலுக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக, மாலில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாலின் விதிமுறைகளின்படி, வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை என்று பாதுகாப்புப் பணியாளர்கள் தெரிவித்ததும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. வேட்டி கட்டிய நபர் அவமரியாதைக்கு உள்ளானதாகக் கூறி பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மாலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயி மற்றும் அவரது மகனிடம் மன்னிப்பு கேட்டனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வேட்டி கட்டிய விவசாயியை உள்ளேவிட மறுத்த ஜிடி மாலை ஒரு வாரம் மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு அந்த வணிக வளாகம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: ”பிறந்தால் ஒருநாள் சாகத்தான் வேண்டும்” - ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை பேச்சு!

இந்த நிலையில், வேட்டி கட்டிய விவசாயியை உள்ளேவிட மறுத்த விவகாரத்தைப் போன்றே, வேறு வகைகளில் தாங்களும் அவமானப்படுத்தப்பட்டோம் என ஃப்ரிடோ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கணேஷ் சோனாவனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நானும் ஏத்தரின் இணை நிறுவனரான ஸ்வப்னில் ஜெயினும் ஒருமுறை பெங்களூருவில் உள்ள ஓர் உணவகத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு நின்றிருந்த காவலாளிகள், நாங்கள் ஷுவுக்குப் பதிலாக, செருப்புகளை அணிந்திருந்ததால் உள்ளேவிட மறுத்தனர். இதனால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். என்றாலும் நாங்கள் தொடர்ந்து அந்த உணவகத்திற்குள் செல்லவில்லை. வேறு உணகத்திற்குச் சென்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இவருடைய எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாவதைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ”நம் நாட்டில் சைக்கிள் வருபவர்களைக்கூட உள்ளே அனுமதிக்காதவர்கள், வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை, செருப்பு அணிந்திருந்தாலும் உள்ளே விட்டுவிடுவர்” எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: விவாகரத்து பற்றிய இன்ஸ்டா பதிவு.. லைக் செய்த அபிஷேக் பச்சன்.. வதந்திகளுக்கு மறைமுக பதில்?