சுஜந்த் சர்மா எக்ஸ் தளம்
இந்தியா

”வடஇந்தியர்கள் வெளியேறினால்..“ பெங்களூரு குறித்து சர்ச்சை கருத்து; எதிர்ப்பால் பல்டி அடித்த பிரபலம்!

பெங்களூருவில் வட இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி ரீல்ஸ் வெளியிட்ட இன்ஸ்டா பிரபலத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தற்போது அவர் பல்டி அடித்துள்ளார்.

Prakash J

இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சரான சுஜந்த் சர்மா, தனது வலைதள பக்கத்தில் ரீல்ஸ்களைப் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில், ”அனைத்து வடஇந்தியர்களும் பெங்களூருவை விட்டு வெளியேறினால், நகரம் காலியாகி விடும்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்த ரீல்ஸில், "நீங்கள் எல்லோரும் ’you northies go back’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் பெங்களூருவை உண்மையிலேயேவிட்டு வெளியேறினால், உங்கள் நகரம் வெறிச்சோடி போகும். முதலில், உங்கள் PGகள் காலியாகிவிடும், நீங்கள் இப்போது சம்பாதிக்கும் பணம் கிடைக்காது, கோரமங்கலாவில் உள்ள அனைத்து கிளப்புகளும் காலியாகிவிடும்.

இந்த கிளப்களில் பஞ்சாபி இசைக்கு நடனமாடுவதை நீங்கள் பார்க்கும் அழகான பெண்கள் எல்லாம் இனி இருக்க மாட்டார்கள். நீங்கள் பேசுவதற்குமுன் நினைத்துப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறினால், பெங்களூரு தன்னைச் சுற்றியுள்ள அனைத்து அழகையும் இழக்கும்" என அதில் கூறியுள்ளார்.

இந்த பதிவுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு, பிரபலங்கள் மற்றும் பயனர்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகரும் ராப்பருமான சந்தன் ஷெட்டி, நடிகைகள் சைத்ரா ஆச்சார் மற்றும் அனுபமா கவுடா, மற்றும் பிக் பாஸ் நட்சத்திரங்கள் ரூபேஷ் ராஜண்ணா மற்றும் தன்ராஜ் போன்றவர்களும் சுஜந்த் சர்மாவின் கருத்துக்கு தங்கள் மறுப்பைத் தெரிவித்தனர்.

இதையும் படிக்க; தேர்தல் | ஹரியானா காங்கிரஸில் உட்கட்சி பூசல்? தூண்டிவிட்ட பாஜக.. பதிலடி கொடுத்த குமாரி செல்ஜா!

இதுகுறித்து பயனர்கள், ”நீங்கள் உண்மையிலேயே வெளியேற முடியுமானால் வெளியேறுங்கள், பெங்களூரு எப்படி வெறிச்சோடி போகிறது என்று பார்ப்போம்” எனவும், ”எல்லாவற்றையும்விட உங்களுக்கு பெங்களூரு தேவை; நீங்கள் பெங்களூரைவிட்டு வெளியேறுவது எங்கள் ஊருக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நீங்கள் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்" எனக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி பலரும் அவருடைய ரீல்ஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சர்மா பின்வாங்காமல் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த ரீல்ஸ்களில், தான் பெங்களூரூவை விரும்புவதாகவும் அந்த வீடியோ நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் கூறி பல்டி அடித்துள்ளார். மேலும் அவர், தாம் செல்லும் நகரங்களின் கலாசாரத்தை உள்வாங்க முயற்சிப்பதாகவும், கன்னடத்தை கற்க விரும்புவதாகவும் தன்னம்பிக்கை வெறுப்பை பரப்புவதற்காக என்னுடைய ரீலை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க:டெல்லி | சிவில் சர்வீஸுக்குப் படித்த ராஜஸ்தான் மாணவர்! 10 நாட்கள் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்பு!