பெங்களூருவின் டிராஃபிக் பற்றி நாடே அறியும். அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்துக்கு செல்வதற்கே அரை மணிநேரம் காத்திருக்கும் அளவுக்கான போக்குவரத்து நெரிசலே இந்தியாவின் டெக் சிட்டியின் நிலையாக இருக்கும்.
அதுவும் மாலை வேளையாக இருந்தால் சொல்லவே வேண்டாம். சாரை சாரையாக வாகனங்கள் வெளிச்சத்தோடு சிக்னல்களில் அணிவகுத்து நிற்பதை பல வீடியோக்கள் ஃபோட்டோக்கள் மூலம் காணலாம். இதற்காகவே பெங்களூருவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் சாலை வழி பயணத்தை தவிர்த்து மெட்ரோ ரயில்களில் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
இப்படியான வழியைத்தான் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்துக்கு செல்வதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். அது குறித்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
அதன்படி காரில் சென்றுக் கொண்டிருந்த அந்த மணப்பெண் பெங்களூருவின் டிராஃபிக்கில் சிக்கியதால் குறித்த நேரத்திற்குள் மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக மணக் கோலத்தில் இருந்தவர் காரில் இருந்து இறங்கி மெட்ரோ நிலையத்துக்குச் சென்று ரயிலில் ஏறி முகூர்த்த நேரத்திற்குள் சென்றடைந்திருக்கிறார்.
இந்த வீடியோவை கண்ட இணையவாசிகள், “நல்ல வேளை மெட்ரோ இருக்கவே உதவியாக இருந்திருக்கிறது. மெட்ரோ ரயில் இல்லாமல் இருந்தால் என்னவாவது?” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேவேளையில் “ஒருவேளை இது விளம்பரமாக இருக்குமோ?” என்றும், “பொதுவாக மணமக்கள் திருமணத்துக்கு முந்தைய நாளே மண்டபத்திற்கு சென்றிடுவார்கள். இதைப் பார்த்தால் பப்ளிசிட்டிக்காக செய்ததை போல இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.