செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெங்களுரில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பாபுசாப்பாளையாவில் நேற்று மாலை கனமழை பெய்தது. மழைக்கு முன்பிருந்தே ஹென்னூர் அருகே பாபுசப்பாளையத்தில் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளது. மழை காரணமாக அக்கட்டடத்தின் பார்க்கிங் தளத்தில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த கட்டடம் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கட்டட உரிமையாளரை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறுகின்றனர். இந்நிலையில்தான் நேற்று மாலை மீண்டும் அந்த பகுதியில் கனமழை பெய்தது. அப்போது அந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது.
இதில், கட்டடத்தின் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். நேற்று இரவு மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து தீயணைப்புத் துறை, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை மேலும் ஒருவரின் சடலம் மீட்டக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடந்து வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் கூறிய தகவலின் பேரில் அதே இடத்தில் மேலும் ஒருவரை சடலமாக மீட்டனர். ஐந்து முதல் எட்டு நபர்கள் வரை உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.