இந்தியா

`அம்மா தூங்குறாங்கனு நினைச்சேன் சார்...’- இறந்த தாயின் சடலத்தோடு 2 நாள்கள் வாழ்ந்த சிறுவன்

`அம்மா தூங்குறாங்கனு நினைச்சேன் சார்...’- இறந்த தாயின் சடலத்தோடு 2 நாள்கள் வாழ்ந்த சிறுவன்

நிவேதா ஜெகராஜா

பெங்களூருவில் 11 வயது சிறுவனொருவன், இறந்த தன் தாயுடன் இரண்டு நாள்கள் தங்கியிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அச்சிறுவனின் 40 வயதான அன்னம்மா என்ற அத்தாய், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து, அதன்மூலம் வரும் வருமானத்தில் மகனை படிக்க வைத்து வந்துள்ளார் அவர். இப்படியான நிலையில், அவர் சில தினங்களுக்கு முன் மரணித்துள்ளார்.

உடல் உபாதைகளினால் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வரும்வரையில் எதையும் உறுதிபட தெரிவிக்க முடியாது என்பதால், சந்தேக மரணமென்றே வழக்குப்பதிந்துள்ளது காவல்துறை. அன்னம்மாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர்தான் இறந்திருக்கிறார். கணவர் மறைவிற்குப்பின், மகனை படிக்க வைக்க வீட்டு வேலைகள் செய்துவந்த அவர், வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி கடைசி சில தினங்களாக அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதனால் பணிக்கு செல்லாமல் ஓய்வில் இருந்திருக்கிறார். ஓய்வில் தூங்கிக்கொண்டிருந்தபோதே, அவர் உயிர் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தாய் இறந்தது தெரியாத சிறுவன், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஓய்வெடுக்கிறார் என நினைத்து, அவரை தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளான். அருகில் இருந்த வீட்டிலிருந்தவர்களிடம், தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சமைக்கவில்லை எனக்கூறி, உணவு மட்டும் வாங்கி சாப்பிட்டுள்ளான் சிறுவன். வீட்டில், தாய்க்கு அருகிலேயே படுத்து உறங்கியதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மூன்றாம் நாளும் சிறுவன் பள்ளிக்கு செல்ல, அன்றைய தினம் அன்னம்மாவின் உடலிலிருந்து மோசமாக துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரும் வீட்டை சோதனையிட்ட போது, உண்மை தெரியவந்துள்ளது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவனிடம் விசாரித்தபோது, `அம்மா ரொம்ப சோர்வா இருந்தாங்க. அதனால தூங்கிட்டாங்கனு நினைச்சேன்’ என சொல்லியிருக்கிறான். இதைத்தொடர்ந்து சிறுவனை மீட்டு தாயின் சகோதரர்வசம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.