இந்தியா

‘எனது பசுக்களை வைத்து எவ்வளவு தங்கக் கடன் கொடுப்பீங்க?’ - ஷாக் கொடுத்த பால் வியாபாரி

‘எனது பசுக்களை வைத்து எவ்வளவு தங்கக் கடன் கொடுப்பீங்க?’ - ஷாக் கொடுத்த பால் வியாபாரி

webteam

பசுவின் பாலில் தங்கம் உள்ளது என்று மேற்குவங்க பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் கூறியதை தொடர்ந்து, ஒருவர் தனது இரு பசுக்களுடன் வந்து தங்கக் கடன் கேட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “இந்திய பசுக்களின் பால் சிறிது மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் தங்கம் கலந்திருப்பதே ஆகும். அத்துடன் இந்திய பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்கின்றன” எனத் தெரிவித்திருந்தார். திலிப் கோஷின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தன்குனி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இரு பசுக்களை தனியார் நிதி நிறுவனத்திற்கு அழைத்து வந்து எவ்வளவு தங்கக் கடன் கொடுப்பீர்கள்? எனக் கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு இருப்பவர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அந்த நபர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 

அதில்,“பசுக்களின் பாலில் தங்கம் உள்ளது என்ற பேச்சை நான் கேட்டேன். ஆகவே தான் எனது இரண்டு பசுக்களுடன் நான் இங்கு நகை கடன் வாங்க வந்துள்ளேன். என்னிடம் 20 பசுக்கள் உள்ளன. இந்த இரு பசுக்களை வைத்து எனக்கு தங்கக் கடன் கிடைத்தால் நான் என்னுடைய தொழிலை பலப்படுத்த உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.