ஹரியானா புலம் பெயர் தொழிலாளி கொலை புதிய தலைமுறை
இந்தியா

பசுக் காலவர்களால் கொல்லப்பட்ட புலம்பெயர் தொழிலாளி - மனைவிக்கு அரசு வேலை வழங்கிய மேற்கு வங்க அரசு!

பாஜக ஆட்சி நடக்கும் ஹரியானாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் என்ற தொழிலாளி சில தினங்களுக்கு முன் அடித்துக் கொல்லப்பட்டார். தற்போது, அவரின் மனைவிற்கு அரசு வேலை வழங்கி மேற்கு வங்க அரசு தனது ஆதரவை அளித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹரியானாவில் சர்க்கி தாத்தி மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் என்ற இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளி, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை சேகரித்து விற்றுப் பிழைப்பு நடந்தி வந்துள்ளார். இவரை கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி பசுக்காவலர்கள் என்று கூறப்படும் ஐந்து பேர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகித்து அடித்து கொலை செய்துள்ளனர்.

கைதான ‘பசுக் காவலர்கள்’

இது தொடர்பாக மொத்தம் ஏழு பேரை போலீஸார் கைது செய்துள்ள சூழலில், ஹரியானா முதல்வரான நயாப் சிங் சைனி, “பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது இப்படி கும்பலாக செயல்படுவதும், படுகொலை செய்வதும் சரியல்ல. இதுபோன்ற குற்றங்களில் எந்த சமரசமும் கிடையாது. பசுக்கள் மீது கிராம மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர் என புரிந்துகொள்ள முடிகிறது. சில சமயங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, அந்த கிராம மக்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். அதை யார் தடுக்க முடியும்? ” என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் கொலை செய்யப்பட்ட மாலிக்கின் மனைவி மற்றும் நான்கு வயது பெண் குழந்தையும் கடந்த புதன்கிழமை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து, மாலிக்கின் மனைவிக்கு பாசந்தி பிஎல்ஆர்ஓ அலுவலகத்தில் உதவியாளராக பணி நியமன கடிதத்தை வழங்கியும், குழந்தையின் கல்விப்பொறுப்புகளை அரசே ஏற்கும் என்றும் மம்தா பானர்ஜி உறுதியளித்திருக்கிறார்.

உலக அளவில் மாட்டிறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இந்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ‘கருதி’ நடைபெறும் இத்தகைய வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் கூட இதே ஹரியானாவில் காரில் பசுவைக் கடத்தியதாக நினைத்து 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பசு பாதுகாப்பு காவலர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.