justice for women கூகுள்
இந்தியா

மேற்குவங்கம்|ஜூனியர் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..ஆதரவாக அடுத்தடுத்து மருத்துவர்கள் ராஜினாமா

”ஆயுத பூஜைக்குப் பிறகு எங்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த பதிலால் நாங்கள் முற்றிலும் விரக்தியடைந்துள்ளோம்” மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Jayashree A

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த ஜூனியர் டாக்டர்கள் மாணவிக்கு நடந்த கொடுமைக்கு (பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை) நீதி கேட்டு மாநில அரசை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுநர் ஆனந்த போஸ் மருத்துவர்களுடன்

இவர்களின் போராட்டமானது முடிவு எட்டப்படாதநிலையில், அடுத்தக்கட்டமாக, ஆர்.ஜி கர் மருத்துவமனை ஜூனியர் மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இவர்களின் உண்ணாவிர போராட்டத்திற்கு மருத்துவர்கள் பலரும் ஆதரவளித்து வந்தனர்.

ஜூனியர் மருத்துவர்களுக்கு ஆதரவாக ஆர்ஜி கார் மருத்துவமனையின் சுமார் 50 மூத்த மருத்துவர்கள் செவ்வாயன்று (அக். 8) மொத்தமாக தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனை அடுத்து, புதன்கிழமை (அக்.9) மாலை மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த், ஸ்வஸ்த்ய பவனில் மாநில பணிக்குழுவுடன் பேச்சு வர்த்தை நடத்த முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஜூனியர் டாக்டர்கள் குழுவை அழைத்தார். இரவு 7.45 மணிக்குத் தொடங்கவிருந்த கூட்டம் சுமார் 9.45 மணிக்குத் தொடங்கியது. தலைமைச் செயலாளார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 29 இளநிலை மருத்துவர்கள் சென்றனர். மேலும் மாநில உள்துறைச் செயலாளார், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் சமீபத்தில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குறை தீர்க்கும் குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும், போராட்டம் நடத்திய ஜூனியர் மருத்துவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே சுமூகமுடிவு எட்டப்படவில்லை.

இதனை அடுத்து ஜூனியர் மருத்துவர்களுக்கு ஆதரவாக மேலும் சில மூத்த மருத்துவர்கள் தங்களின் பணியை தொடர்ந்து ராஜினமா செய்து வருகின்றனர். வெளிவந்த தகவலின்படி புதன்கிழமை இரவு வரை ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் மொத்தம் 106 மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

மேலும் ஜல்பைகுரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த 19 மருத்துவர்கள், சிலிகுரியின் வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த 42 பேர் கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையச் சேர்ந்த 35 பேர் மற்றும் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 70 மருத்துவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர்.

இது மாநில அரசுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. மேலும் போராட்டமானது வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், மாநில அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் மருத்துவர்களில் ஒருவரான தேபாசிஷ் ஹல்டர் என்பவர், ”சில வாய்மொழி உத்திரவாதங்களைத் தவிர, இந்தக்கூட்டத்தில் இருந்து எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எங்களின் கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என அரசு சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் காலக்கெடுவையாவது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவர்கள் மறுத்துவிட்டனர். நாங்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது. நாங்கள் சுமார் 100 மணிநேரம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் ஆயுத பூஜைக்குப் பிறகு எங்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த பதிலால் நாங்கள் முற்றிலும் விரக்தியடைந்துள்ளோம் ”என்று பேசினார்.

அரசுக்கும் மருத்துவர்களுக்கிடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையானது ஆர்ஜி கார் மருத்துவமனையின் சுமார் 50 மருத்துவர்களின் ராஜினாமாவிற்கு பிறகு நடந்துள்ளது. மருத்துவர்களின் இத்தகைய நடவடிக்கையால் மருத்துவக் கல்லூரிகளில் சுகாதார சேவைகளை பாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை விரைந்து முடிக்கவேண்டும் என்றும் மூத்த மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர்.