இந்தியா

‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து

‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து

rajakannan

ஓரினச்சேர்க்கை இந்துத்துவாவிற்கு எதிரானது என்றும் அது சரி செய்யப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். 

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு ‘இயற்கைக்கு மாறான பாலுறவு’ கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது. இதன்படி, வயதுக்கு வந்த 2 ஆண்களோ அல்லது பெண்களோ ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டு சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்க முடியும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சட்டம் குறித்து விசாரணை நடத்திய டெல்லி உயர்நீதிமன்றம், ஒப்புதலோடு உடலுறவு கொள்ளும் 18 வயதுக்கும் மேலானவர்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்தது. மேலும். இது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் அறிவித்தது.

 டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், 377-வது பிரிவை திருத்துவது குறித்து மாற்றம் செய்வது குறித்தோ அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என 2013ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று தொடங்கியுள்ளது. 

இதற்கிடையில், ஓரினச்சேர்க்கை குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், “ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதை நம்மால் கொண்டாட முடியாது. அது சதாரணமான தன்மை கிடையாது. இது சரிசெய்யப்பட முடியும் என்றால், அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்” என்றார். மேலும், “7 பேர் அல்லது 9 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சிபாரிசு செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஒருமுறை இதுதொடர்பாக சுவாமி கூறுகையில், “ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்குவது வணிக இலாபத்திற்கு வழிவகுக்கிறது. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து நகரங்களிலும் ‘கே’ பார்க்கள் திறக்கும் நிலை ஏற்படும். இது மரபணு குறைபாட்டை கொண்டாடுவதற்கு சமம்”என்று தெரிவித்திருந்தார்.