கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு வழங்கிய அன்பளிப்புக் கூடையில் பிளாஸ்டிக் பேப்பர் சுற்றுப்பட்டிருந்ததால் பெங்களூரு மாநகராட்சி மேயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் பதவியேற்றார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்து சொல்ல பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே நேற்று அவரைச் சந்தித்தார். அப்போது மாநகராட்சி மேயர் கங்காம்பிகே முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒரு உலர்பழக் கூடையை அன்பளிப்பாக வழங்கினார். அந்தக் கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருந்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் நாடு முழுவது பிளாஸ்டிக் பயன்பாடிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கூடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான ரசீதும் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்கள் பிடிப்பட்டால் அவர்களுக்கு முதன்முறை 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதுவே தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் 1000 ரூபாயாக இருக்கும் என்று 2016ஆம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.