உச்ச நீதிமன்றத்தில் மாற்றி அமைக்கப்பட்ட நீதி தேவதையின் உருவ சிலைக்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தங்களை எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூட் வரும் நவம்பர் 10ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், சமீபகாலமாக அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடியை தனது இல்லத்திற்கு அழைத்தது, ராமஜென்ம பூமி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை கடவுள் தனக்கு வழிகாட்டியதாக கூறியது போன்றவை கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிய சர்ச்சையாக உச்ச நீதிமன்றத்தில் நீதி தேவதையின் புதிய சிலை திறப்பும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
கண்கள் மூடியபடி ஒரு கையில் நீதி தராசு மறு கையில் வாளும் இருக்கும் நீதி தேவதையின் சிலைக்கு பதிலாக கண்கள் திறந்தபடி ஒரு கையில் நீதித்தராசும் மற்றொரு கையில் அரசியல் சாசனத்தின் புத்தகத்தை வைத்திருப்பது போன்ற சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியாவில் நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டிருக்காது அது கண்களைத் திறந்து அனைவரையும் சமமாக பார்க்கும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதியின் முடிவிற்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் ஒருமித்த கருத்துடன் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதை தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளது.
அந்த எதிர்ப்பு தீர்மானத்தில் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதி துறைகளும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என இரண்டு தரப்பும் சம பங்களிப்பை கொண்டது. அப்படி இருக்கும் போது இத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் பொழுது அதை வழக்கறிஞர்கள் சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செய்தது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அசோசியேஷனின் முன்னாள் தலைவரான ஆதிஷ் அகர்வால்வும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அனைத்து தரப்பினரிடமும் தலைமை நீதிபதி ஆலோசித்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதேபோல உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கும் முடிவிற்கும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் வழக்கறிஞர்களுக்கான உணவகமாக மாற்றப்படும் என உறுதி அளித்து இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த இடத்தை அருங்காட்சியமாக மாற்ற முடிவு எடுத்திருப்பதை திரும்ப பெற வேண்டும் என்று உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.