தொடர் விடுமுறை மற்றும் வேலை நிறுத்தும் ஆகியவற்றால் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊதிய திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கோரியும், வங்கிகளின் இணைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 3.20 லட்சம் வங்கி அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. நாளை தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தால் வங்கிகள் இயங்காது. அதைத்தொடர்ந்து 4வது சனிக்கிழமை வழக்கம் போல் வங்கிகளுக்கு விடுமுறை.
பின்னர் ஞாயிறு விடுமுறை. அதைத்தொடர்ந்து 24ஆம் தேதியான திங்கட்கிழை அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். அதன்பின், 25ஆம் கிறிஸ்துமஸ் பண்டிகையால் அரசு விடுமுறை அன்றும் வங்கிகள் விடுமுறை. அடுத்து வரும் 26ஆம் தேதி அன்று 11வது இருபடி ஊதிய திருத்தத்தை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதனால் 24ஆம் தேதியை தவிர்த்து நாளை முதல் 5 நாட்கள் வங்கிகள் தொடர்விடுமுறை வரவுள்ளது.
எனவே வங்கிப் பணிகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த விடுமுறை காலத்தில் ஏடிஎம்-கள் வழக்கம் போல் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் வரும் 26ஆம் தேதி மட்டும் ஏடிஎம்களின் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் எனப்படுகிறது. பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலை நீக்க வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.