இந்தியா

மொபைல் சர்வீஸ் போல் வங்கியையும் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அதிரடி

webteam

மொபைல் நம்பரை மாற்றாமல், வேறு மொபைல் நிறுவனத்தின் சேவைக்கு மாற்றுவது போல, வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் வேறு வங்கி சேவைக்கு மாறும் வசதியை விரைவில் அமல்படுத்த, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

மொபைல் சேவையில் குறை இருந்தால், வேறு நிறுவனத்துக்கு மாற மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதற்கு, மொபைல் எண் மாறிவிடும் என்பதே காரணமாக இருந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் மொபைல் எண்ணை வேறு நிறுவன சேவைக்கு மாற்றும் வசதியை மத்திய தொலைத்தொடர்புத் துறை கொண்டு வந்தது. இதே வசதியை வங்கி சேவையிலும் அளிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

”வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு எண்ணை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வங்கி சேவை இதை சாத்தியமாக்கும்” என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முத்ரா தெரிவித்துள்ளார்.

தற்போது ஆதார் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனையையும் மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஆதார் அடிப்படையில் வங்கி கணக்கு எண் மாற்றும் வசதி கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.

இதுகுறித்து யுஐடிஏஐ துணை இயக்குநர் ஜெனரல் சம்னேஷ் ஜோஷி கூறுகையில், வங்கிக்கணக்கு மாற்றும் வசதியைப் பொறுத்த வரை, ஆதார் நிரந்தர நிதி முகவரியாகக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.