lovers model image freepik
இந்தியா

மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: இந்திய காதலரை மணக்க வந்த வங்கதேச பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

எல்லை தாண்டிய காதலில், வங்கதேசம் பெண் ஒருவர், இந்தியாவிற்கு வந்து திரும்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Prakash J

இன்று, உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகி அவர்கள்மீது காதல் வயப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருவதுடன், அதற்காக தங்களது இனம், மதம், மொழி கடந்து நாடுவிட்டுச் செல்லும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

lover model image

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் 32 வயதான தில்ருபா ஷர்மி. அழகுக்கலை நிபுணரான இவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியானார். என்றாலும், தன் குழந்தைகளுன் வங்கதேசத்தில் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டம் மாலிப்பூர் பகுதியில் உள்ள பர்தா ரோஷன்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கரீம் (27). இவர், பஹ்ரைனில் சமையல்காரராகப் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஆன்லைனில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின், நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

இதையடுத்து, காதலரை மணப்பதற்காக தில்ருபா ஷர்மி, தனது மூன்று குழந்தைகளுடன் சுற்றுலா விசாவில், கடந்த செப். 26ஆம் தேதி லக்னோ வந்தடைந்தார். அதே நாளில் பஹ்ரைனில் இருந்தும் காதலர் அப்துல் கரீம் லக்னோ வந்துள்ளார். பின்னர், இருவரும் குழந்தைகளுடன் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு காதலியையும், அவருடைய குழந்தைகளையும் தன்னுடைய கிராமத்துக்கு கரீம் அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான் காதலி ஷர்மி அதிர்ச்சியாகி கேட்டுள்ளார். காரணம், அப்துல் கரீமுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார்.

ஷர்மியிடம் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறியதாலயே அவரைக் கைப்பிடிக்க எல்லை தாண்டி வந்துள்ளார், ஷர்மி. ஆனால், கரீமிற்கு திருமணமானதும், அவருடைய மனைவி அங்கே வசிப்பதும் கண்டும் பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார் ஷர்மி. இந்த விஷயம் அந்தக் கிராமத்தில் பூதாகரமாய் வெடிக்க போலீசாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில், ஷர்மி, மீண்டும் தனது நாடு ஒப்புக்கொண்டார்.

lover model image

இதுகுறித்து காவல் துறையினர், ”விசாரணையில் எந்த சந்தேகத்துக்குரிய சம்பவங்களும் கண்டறியப்படவில்லை. அவரது சுற்றுலா விசா சரியாக உள்ளது. அவர் மீண்டும் வங்கதேசம் சென்றுவிட்டார். கரீமும் பஹ்ரைனுக்குத் திரும்பிச் செல்வதாகக் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.