அசாம் என்ஐடி எக்ஸ் தளம்
இந்தியா

அசாம் | முகநூலில் இந்தியாவுக்கு எதிராக லைக்.. சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வங்கதேச மாணவி!

Prakash J

அசாம் மாநிலம் சில்சாரில் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) செயல்பட்டு வருகிறது. இக்கல்வி மையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் படித்து வந்துள்ளார். இவர், முகநூலில் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு தொடர்ந்து லைக் பதிவிட்டு வந்துள்ளார் எனக்கூறப்படுகிறது. இந்த விவகாரம், கடந்த வாரம் சில்சார் அசாம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் மூலம் பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து வங்கதேச மாணவியின் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டு, அவரது நடவடிக்கைகள் புகாராக எழுந்தன. இதனால் அந்த மாணவியை நாட்டைவிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், நேற்று (ஆக.26) அவர் இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையான கரீம்கஞ்ச் பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் முழுப் பாதுகாப்புடன் இந்திய எல்லையைக் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிகிறது. இருப்பினும் அம்மாணவி தான் சொந்த நாடு திரும்ப தானே விருப்பம் தெரிவித்திருந்ததாக என்ஐடி தெரிவித்திருந்தது. இதே என்ஐடியில் சுமார் 70 வங்கதேச மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மொத்த கடனும் அடைப்பு.. ஷாக் ஆன ஆர்பிஐ.. பக்கா பிளான் போட்ட டாடா குழுமம்!