Gold Bars smuggle Twitter
இந்தியா

‘2,000 ரூபா தரேன்னு சொன்னாங்க..’ ஆடைக்குள் 2 கிலோ தங்கக்கட்டிகளை பதுக்கியிருந்த பெண் கைது!

வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரூ.2,000 கூலிக்கு ஆசைப்பட்டு சுமார் 2 கிலோ எடையுள்ள ரூ.1.29 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

Justindurai S

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்திய - வங்கதேச எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வங்கதேச பெண் ஒருவர் தங்கத்துடன் இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக இந்திய - வங்கதேச எல்லை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் மகிளா ஜவான்களுக்கு (பிஎஸ்எஃப் வீராங்கனைகள்) ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த மகிளா ஜவான்கள் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த பெண் ஒருவரை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பெண் தனது ஆடைக்குள் 27 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. துணியில் நகைக்கட்டிகளை கட்டி, அதை இடுப்பில் கட்டிக்கொண்டு அப்பெண் சென்றிருக்கிறாரென சொல்லப்படுகிறது.

gold smuggling

இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், அவரின் பெயர் மாணிக்க தார் (34) என்பதும், அவர் வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்தகட்ட விசாரணையில், அப்பெண் தான் மேற்கு வங்க மாநிலம் பராசத்தில் உள்ள அடையாளம் தெரியாத நபரொருவருக்கு தங்கக் கட்டிகளை விற்க திட்டமிட்டிருந்ததை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தங்கம் கடத்துவது இதுவே முதல் முறை என்றும், இந்த வேலையை முடித்தால் தனக்கு 2,000 ரூபாய் கிடைக்கும் எனவும் அந்த பெண் கூறியிருந்திருக்கிறார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 தங்கக் கட்டிகளின் எடை 2 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவற்றின் மதிப்பு ரூ.1.29 கோடி எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் பெட்ராபோல் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.