வித்யாராணி file image
இந்தியா

கணவரைப் போலீசில் சிக்க வைக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனைவி.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெங்களூரூவில் கணவரைப் போலீசில் சிக்க வைக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, மனைவியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

PT WEB

பெங்களூரு ரூரல் ஆனேக்கல் காவல்நிலையம் செல்போன் எண்ணுக்கும், பெங்களூரு என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு குறுந்தகவல் சென்றது. அந்த குறுந்தகவலில் ஆனேக்கல் பகுதியில் உள்ள, தனியார் நிறுவனத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டு இருந்தது.

ஆனேக்கல் காவல் நிலையம்

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த தனியார் நிறுவனத்தில், வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை நடத்தியதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை எனத்  தெரிகிறது. பின்னர் குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த எண் ஆனேக்கல்லில் வசிக்கும் கிரண் என்பவருடையது எனத் தெரியவந்தது. பின்னர் அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு நடத்திய விசாரணையில், கிரண் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். அவருடைய மனைவி  வித்யாராணியிடம் விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்,  வித்யாராணிக்கும், ராம்பிரசாத் என்பவருக்கும் சமூக  வலைத்தளம் மூலம், பழக்கம் ஏற்பட்டு, இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதனையறிந்த  வித்யாராணி கணவர் கிரண், வித்யாராணியின் செல்போனை  உடைத்து உள்ளார். பின்னர் வேறு செல்போனில் இருந்து,  ராம்பிரசாத்திடம், வித்யாராணி பேசி வந்துள்ளார்.

இந்தநிலையில் கிரணைப் போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்றால் அவரது செல்போனில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறுந்தகவல் அனுப்பும்படி, வித்யாராணியிடம், ராம்பிரசாத் கூறியுள்ளார். இதனை கேட்டு கிரண் செல்போனில் இருந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. 

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த போலீசார் வித்தியராணியை  கடுமையாக எச்சரித்து விட்டு வந்தனர்.

ஆண் நண்பரின் பேச்சைக் கேட்டு கணவர் செல்போனில் இருந்து மனைவி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.