Shoe Rack கோப்புப்படம் - freepik
இந்தியா

பெங்களூரு | 7 வருடங்களாக செருப்பு திருட்டு... 2 திருடர்கள் இப்போது சிக்கியது எப்படி?

Jayashree A

அதிக தொகை கொடுத்து நாம் புத்தம் புதிதாக வாங்கிய செருப்பு ஒன்று ஜோடியாக காணாமல் போனால் நம் மனம் என்ன பாடுபடும்... ‘வாங்கி ஒரு வாரம்கூட ஆகலை... இப்படி திருட்டு போயிடுச்சே’ என்று பதைபதைப்போம். ஆனால் அதற்காக காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கமாட்டோம். காரணம் ‘செருப்புதானே... வேறு ஒன்று வாங்கிக்கொள்ளலாம்’ என்று மனது சமாதானம் ஆகிவிடும்.

மறுவாரம், காணாமல் போன அதே செருப்பு போன்று வேறொன்று குறைந்த விலைக்கு கிடைத்தால், விட்டதை பிடித்துவிட்டது போல அதை வாங்கி திருப்திபட்டுக் கொள்வோம். ஆனால் திருடு போன அதே செருப்புதான் மலிவான விலையில் நாம் வாங்கியது என்று தெரியவந்தால்... இந்த இடத்தில் ‘என்ன சொல்றீங்க..? அதெப்படி..?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் செய்தி இதுதான்.

பெங்களூருவை சேர்ந்த இருவர் கடந்த ஏழு வருடங்களாக செருப்புகளை திருடி அதை புதிதுபோல் மாற்றி விற்று வந்துள்ளனர். அவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதுவரை தோராயமாக 10,000 ஜோடி செருப்புகளை திருடி, மறுவிற்பனை செய்துள்ளனர் இவர்கள்.

பெங்களூரு வித்யாரணயபுரத்தை சேர்ந்த கங்காதர் மற்றும் யெல்லப்பா என்ற இருவர், அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், கோவில்கள் என்று பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள புத்தம் புதிய பிராண்டட் வகை ஷூக்கள், செருப்புகளை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதுவும் இதெற்கென்று தனி ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, இரவில் அனைத்து இடங்களுக்கும் சென்று புது செருப்புகளை திருடி, சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு, அதே ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்து விடுவார்களாம்.

பின்னர் திருடப்பட்ட செருப்பு, ஷூக்களை துடைத்து பாலிஷ் செய்து ஞாயிறு சந்தைகளிலும், ஊட்டி மற்றும் புதுச்சேரி போனற நகரங்களிலும், சுற்றுலாப் பகுதிகளுக்கும் சென்று அதை மறு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர்.

இவர்கள் அப்படி கடந்த வாரம் ஆட்டோவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு செருப்பு திருட சென்றுள்ளனர். அங்கு செருப்பை மட்டும் திருடாமல், கூடவே இரு கேஸ் சிலிண்டர்களையும் திருடி இருக்கின்றனர். சிலிண்டர் திருடு போனதால், உரிமையாளார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதில் உஷாரான போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி-யின் உதவியால், செருப்பு திருடர்களை பிடித்தனர்.

போலீஸாரின் தகவலின்படி கடந்த 7 வருடங்களில் இவர்கள் இதுவரை கிட்டத்தட்ட 10,000 ஜோடி செருப்பிற்கு மேல் திருடி உள்ளனராம். அவற்றில் மறுவிற்பனை செய்யப்பட்டது போக 715 உயர் ரக ஜோடி செருப்புகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன.