பெங்களூரு கோரமங்களாவின் விஆர் லே-அவுட்டில் உள்ள தனியார் பெண்கள் விருந்தினர் விடுதியில் கிருத்தி குமாரி என்ற இளம்பெண் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கி வந்துள்ளார். எம்பிஏ படித்துள்ள இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி அவர் தனது விடுதி அறையில் கிருத்தி குமாரி இருந்த போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவரை ஒரு இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாயாக தாக்கியிருக்கிறார். தொடர்ந்து கிருத்தியின் கழுத்தை அறுத்து, கொலை முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் படுகாயமடைந்த கிருத்தி சரிந்து விழுந்துவிட்டார். உடனே அந்த இளைஞர் அவரை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். கிருத்தி குமாரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற பெண்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் கிருத்தி குமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்த இளைஞர் கிருத்தி குமாரிக்கு தெரிந்த நபராகத்தான் இருக்க வேண்டும்; இது காதல் பிரச்சனையாக இருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே விடுதியில் கிருத்தி குமாரி கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்திருந்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியை போலீசார் அடையாளம் கண்ட நிலையில் அந்த இளைஞரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தப்பியோடிய இளைஞர் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவர் அந்தப் பெண்ணை கொலை செய்துவிட்டு மத்தியப் பிரதேசத்தில் சொந்த ஊரில் பதுங்கியிருந்ததை அறிந்த போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு கிருத்தி குமாரியும் அபிஷேக்கின் காதலியும் ஒரே விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். அப்போது வேலையில் இருந்து நின்றிருந்த அபிஷேக், வேறு வேலைக்கு போகாமல் சும்மா இருந்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அபிஷேக்கின் காதலி அபிஷேக்குடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
ஆனால் அபிஷேக் தொடர்ந்து தனது காதலியின் விடுதிக்கு சென்று பிரச்னை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண்ணை கிருத்தி குமாரி வேறு விடுதியில் தங்க வைத்துவிட்டு கடந்த மார்ச் மாதம் தானும் வேறு விடுதிக்கு மாறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் தன் காதலி தன்னை விட்டு விலக கிருத்தி குமாரிதான் காரணம் என்று நினைத்து அவரைக் கொலை செய்திருக்கிறார்.
தன் காதலுக்கு இடையூறு விளைவித்தாக எண்ணி, ஒரு அப்பாவி இளம் பெண்ணை இளைஞரொருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.