இந்தியா

₹1.3 கோடி BMW காரை ஆற்றில் மூழ்கடித்த பெங்களூரு நபர்: ஏன் தெரியுமா? சோக நிகழ்வின் பின்னணி!

₹1.3 கோடி BMW காரை ஆற்றில் மூழ்கடித்த பெங்களூரு நபர்: ஏன் தெரியுமா? சோக நிகழ்வின் பின்னணி!

JananiGovindhan

மன உளைச்சலில் இருந்த நபர் ஒருவர் 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.ட்பிள்யூ காரை ஆற்றில் மூழ்கடித்துச் சென்றிருக்கிறார் என்று கூறினால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் கர்நாடகாவில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டின காவிரி ஆற்றில் சிவப்பு நிற BMW கார் ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மிதந்து வந்திருக்கிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் முதலில் காருக்குள் எவரேனும் இருக்கிறார்கள் என்பதை பார்த்து எவரும் இல்லையென உறுதிபடுத்தியதும் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் மிதந்து வந்த காரை மீட்டு அது தொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். 

அதில், ஆற்றில் மிதந்து வந்தது 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள BMW X6 ரக கார் என்றும், அது, பெங்களூருவின் மகாலஷ்மி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த நபருக்கு சொந்தமானது என்பதும் கார் எண் மூலம் தெரிய வந்திருக்கிறது. 

இதனையடுத்து காரின் உரிமையாளரை வரவழைத்து விசாரித்தபோது, பெங்களூருவுக்கு சென்றுக் கொண்டிருந்த போது ஏதோ மர்ம நபர்கள் சிலர் தன்னை பின்தொடர்ந்து வந்து கொலை செய்ய முற்பட்டதால் காரை ஆற்றில் இறக்கிவிட்டு கிளம்பிவிட்டேன் என போலீசிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அவரது வாக்குமூலத்தில் சந்தேகித்த போலீசார் அவரது உறவினர்களை தொடர்பு கொண்ட விசாரித்த போது, கார் உரிமையாளாரின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்ததை அடுத்து கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காக தனியாக காரை ஓட்டிச் சென்ற போது இப்படி ஆற்றில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார் எனக் கூறியிருக்கிறார்கள்.

அந்த நபரின் மன நிலையை கருத்தில் கொண்டு அவர் மீது எந்த வழக்கும் பதிவிடாமல் விட்டுவிட்டு காரை உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். தற்போது அந்த கார் உரிமையாளர் மன உளைச்சலில் இருந்து மீள்வதற்காக தேசிய மனநல மற்றும் நரம்பியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.