தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து டெல்லி அரசும் மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகமாக ஏற்படும் என்பதால், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளை விற்க, வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் தடை விதிக்க, பட்டாசு வெடிக்காமல் டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டைப்போல் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கடந்த ஆண்டு பட்டாசு வெடிக்காததால் மாசுபாடு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாதம் இறுதி வரை பட்டாசு விற்க, வெடிக்க இன்று தடை விதித்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. மேலும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பட்டாசு விற்பனையை டெல்லியில் தொடரலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.