இந்தியாவில் இனி எப்போதும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா குற்றஞ்சாட்டியிருந்தார். தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது எனப் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் கடுமையான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் படியே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும், 2010-ல் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் தரநிலை அடிப்படையிலேயே இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்தச் சூழலில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வரும் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படும் என்றார். இதுதொடர்பான எந்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் அரோரா குறிப்பிட்டார்.