கர்நாடகா புதிய தலைமுறை
இந்தியா

கர்நாடகாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை : மடாதிபதி மற்றும் உதவியாளர் கைது

கர்நாடகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மடாதிபதியை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ஜெகன்நாத்

மடாதிபதி பால மஞ்சுநாத சுவாமி

கர்நாடகம் மாநிலம், துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்கரனஹள்ளி வித்யா சவுடேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான மடத்தின் மடாதிபதியாக பால மஞ்சுநாத சுவாமி (37) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு தோல் நோய் இருந்துள்ளது. இதுகுறித்து தனது முன்னாள் உதவியாளர் அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர் என இளம்பெண் ஒருவரை மடாதிபதிக்கு சிகிச்சை அளிக்க அழைத்து வந்துள்ளார் அபிஷேக்.

ஆனால் அந்த இளம்பெண் மருத்துவரிடம் தனது உடலில் உள்ள தோல் நோய் பிரச்னைகளை காண்பிக்க மடாதிபதி பால மஞ்சுநாத சுவாமி மறுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தன்னுடைய தோல் நோய் சம்பந்தமான புகைப்படங்களை அனுப்பி விடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார்.

மடாதிபதி பால மஞ்சுநாத சுவாமி

அதனை இளம்பெண் மருத்துவரும், மடாதிபதியின் முன்னாள் உதவியாளர் அபிஷேக்கும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை வைத்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து பிப்ரவரி 10 ஆம் தேதி மடாதிபதி தற்போதைய உதவியாளர் அபிலாஷ் மூலம், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடரந்து சைபர் கிரைம் போலீசார் இளம்பெண் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மடாதிபதி கைது

இந்த நிலையில், அபிஷேக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மடாதிபதி தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வருவது வெளியேவந்துள்ளது. இதுதொடர்பான பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அபிஷேக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மடாதிபதி பால மஞ்சுநாத சுவாமி

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் அசோக் கேவி தலைமையிலான போலீசார் மடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். சிறுமியை மடாதிபதி வன்கொடுமை செய்ததும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மடாதிபதி மீது அளித்த புகாரை வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை மனோஜ்குமார் என்பவர் மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீஸில் அவர்கள் புகார் அளிக்கவே மனோஜ்குமாரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மனோஜ்குமார் என்பவர் மஞ்சுநாத சுவாமியின் தீவிர சீடர் என்பதும் குனிகல் டவுனில் மொபைல் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.