ராஜீவ் பஜாஜ் ட்விட்டர்
இந்தியா

”28 சதவிகிதம் ஜிஎஸ்டி எதற்கு?” - மத்திய அரசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ராஜீவ் பஜாஜ்!

Prakash J

புனேயில், பஜாஜ் நிறுவனத்தின் சார்பில் புதிய ரக பைக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், ”அண்மைகாலமாக வாகனங்களின் விலை உயர்வுக்குக் காரணம், BS VI மற்றும் ABS விதிமுறைகள்தான். தவிர, அதிக வரி மற்றும் கட்டுப்பாடுகளினால் மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்ந்துவருகிறது. BS VI மற்றும் ABS கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு, ரூ.71 ஆயிரமாக இருந்த பல்சர் 150 பைக்கின் விலை, தற்போது ரூ.1,50,000 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் ஆட்டோமொபைல்களின் விலையை தேவையற்ற முறையில் அரசாங்கம் உயர்த்தியுள்ளது” எனக் குற்றஞ்சாட்டிய அவர், “நாம் ஏன் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசினய அவர், ”பிற ஆசிய நாடுகளில் 8 சதவீதம், 14 சதவீதம்தான் வரி விதிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கான GST வரியை 18% அல்லது 12% ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் 125 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன்கொண்ட பைக்குகளுக்கு ஆன்டி- லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு BS4 விதிமுறைகளை மாற்றியமைத்து, BS6 உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயமாக்கியது. BS6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தாம் எதிர்க்கவில்லை” என்றார்.

மேலும், பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரான்சின் ராணியாக இருந்த மேரி-ஆன்டோனெட் பற்றி குறிப்பிட்ட ராஜீவ் பஜாஜ், “நாமும் நம் மக்களையும் கேக் சாப்பிடச் சொல்லப் போகிறோமா?” என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: 1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH.. செம்ம உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன்.. #ViralVideo