பாபா ராம்தேவ் புதிய தலைமுறை
இந்தியா

“அலோபதியால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பு” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்!

யோகா குருவான பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Prakash J

யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டிருந்தார்.

மேலும், மேலும் பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிறிய அளவிலான விளம்பரங்கள் மூலம் மன்னிப்பு கோரியிருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இனி தவறு செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் மன்றாடிய நிலையில் அந்த உத்தரவாதத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்துவைத்தது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: ஆளும்கட்சி பேரணி.. 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

இந்த நிலையில் பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிணிநீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எனவே, அலோபதி மருந்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர். நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி, உலகை அடக்கியாள்வதற்காக ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர்.

அதேசமயம், இஸ்லாம் மதத்தின் பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர். உலகப் போர்களிலும், பல்வேறு துயரங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

ஆனால் இன்று ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் விஷம் கலந்த செயற்கை மருந்துகளை உட்கொண்டு இறந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மருத்துவச் சுதந்திரத்திற்கான இயக்கமாக பதஞ்சலி உள்ளது. இதை, மேலும் விரிவடையச் செய்வோம்” எனப் பேசினார். பாபா ராம்தேவ் இப்படிப் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: தாய்லாந்து: அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்வு... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?