இந்தியா

‘அமெரிக்க செயலி’ தான் பதஞ்சலியின் ‘கிம்போ’ - அதிர்ச்சித் தகவல்..!

webteam

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நோக்கில், பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் சுவதேசி சம்ரிதி சிம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த சிம்-ஐ கடந்த 27-ம் தேதி பாபா ராம் தேவ் அறிமுகப்படுத்தினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தோடு கை கோர்த்து சிம் கார்டுகளை விற்பனைசெய்து வரும் பதஞ்சலி இதனை நாடு முழுக்க தனித்தே செய்ய திட்டமிட்டிருக்கிறது. 

இந்நிலையில் சிம் கார்டை தொடர்ந்து ‘கிம்போ’ என்ற செயலி ஒன்றையும் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் ‘கிம்போ’வை  அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கிம்போ என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. அதற்கு ‘நலமாக இருக்கிறீர்களா’ என்று பொருள். இந்தச் செயலியை வெளியிட்டுள்ள பதஞ்சலி நிறுவனம், இந்தியாவின் முதல் சாட் (chat) செயலி இது எனவும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கிம்போ செயலி பதஞ்சலி நிறுவனம் தயாரித்தது அல்ல, அது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உருவாக்கப்பட்ட ‘போலோ மெசேஞ்சர்’ செயலி என தகவல் வெளியாகியுள்ளது. அதுவே தற்போது பதஞ்சலி நிறுவனத்தால் கிம்போ என பெயர் மாற்றப்பட்டுள்ளதகாவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கிம்போ செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் போது, அதில் ‘போலோ செயலி’யில் உங்கள் நண்பர்களை தேடலாம் என வருகிறது. அதுமட்டுமின்றி மேலும் சில குறிப்புகளிலும் போலோ செயலி என்று உள்ளது.

கிம்போ செயலியை நீங்கள் பயன்படுத்த தொடங்கியதும், கிம்போவிற்கு வரவேற்கிறோம். பாரத்தின் முதல் மெசேஜிங் செயலி என்ற மெசேஜ் வருகிறது. ஆனால் கிம்போ இணையதளத்தில் ‘போலோ குழு’ என்று காட்சியளிக்கிறது.

கிம்போவின் முகநூல் பக்கம் ‘கிம்போ’ செயலியின் புகைப்படம் மற்றும் பெயரில் உள்ளது. ஆனால் 2016 பிப்ரவரி மாதம் முதலே செயலி செயல்படுவதாகவும், அப்போது போலோ செயலி என்ற பெயர் கொண்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் போலோவின் ட்விட்டர் பக்கத்தில் போலோ சாட் என்ற செயலி 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் போலோ சாட் என்ற செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்யும் போது, அது பதஞ்சலி நிறுவத்தின் பெயரில் மாற்றப்பட்டிருப்பதும் தெரிகிறது. 

கிம்போ செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்யும் போது, அது ஆப்டியோஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

அதுதொடர்பாக இணையத்தில் தேடும் போது, அதன் நிறுவனர் சுமித் குமார் என்பதும், அவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. அவரது புகைப்படமே போலோ சாட் என்ற செயலியின் முகப்பு படமாகவும் உள்ளது. 

ஆப்டியோஸ் என்ற அந்த நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரியை பார்க்கும் போது, அது கலிபோர்னியாவை குறிப்பிட்டு காட்டுகின்றது.

இதனால் போலோ சாட் என்ற செயலியை பெயர் மாற்றம் செய்தே பதஞ்சலி நிறுவனத்தின் ‘கிம்போ’ செயலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

courtesy : Alt News