இந்தியா

விப்ரோ தலைமை பதவியில் இருந்து அசிம் பிரேம்ஜி வில‌கல்

விப்ரோ தலைமை பதவியில் இருந்து அசிம் பிரேம்ஜி வில‌கல்

webteam

நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தை சுமார் அரை நூற்றாண்டாக வழிநடத்திய அசிம் பிரேம்ஜி தனது செயல் தலைவர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பிறந்த அசிம் பிரேம்ஜி, தன்னுடைய தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தால் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோவை உருவாக்கியவர். மென்பொருள் உலகின் சக்கரவர்த்தி எனவும் அறியப்படுகிறார். தொழில்துறையில் இவரது திறமைகளைப் பாராட்டி கடந்த 2005ஆம் ஆண்டு இந்திய அரசு அ‌சிம் பிரேம்ஜிக்கு பத்ம பூஷண் விருதும், 2011ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கி சிறப்பித்தது. 

இதுதவிர, வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ மருத்துவர் பட்டங்களையும் வழங்கி சிறப்பித்துள்ளன. உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள அசிம் பிரேம்ஜிக்கு,‌ வணிகத்துறையில் சிறந்து விளங்கியதற்காக எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட வணிக நாளிதழ்கள் விருதுகள் வழங்கியுள்ளன. ‌

கடந்த 2001ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய அவர், அதன்மூலம், பல மாநிலங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில்தான், விப்ரோ நிறுவனத்தில் செயல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அசிம் பிரேம்ஜி அறிவித்துள்ளார். 

தொடர்ந்து, விப்ரோ நிறுவனத்தில் தலைமை வியூக அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் உள்ள அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷத் பிரேம்ஜி புதிய செயல் தலைவராகப் பொறுப்பேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல் தலை‌வர் பதவியிலிருந்து அசிம் பிரேம்ஜி விலகினாலும் கவுரவ தலைவராக தொடர்‌வார் என விப்ரோ அறிவித்துள்ளது.