அயோத்தி பிரச்னையில் மத்தியஸ்திற்கான முடிவை உச்சநீதிமன்றம் நாளை வெளியிடவுள்ளது.
அயோத்தி பிரச்னை குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், அயோத்தி வழக்கு என்பது வெறும் நிலம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல என்றும், அது மக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பானது என்றும் தெரிவித்தனர். அயோத்தி பிரச்னையில் கடந்த காலங்களில் என்ன நடந்தது எனப் பார்ப்பதை விட, தற்போதைய சூழல் என்ன எனப் பார்த்து அதன் அடிப்படையில் தீர்வு காண்பதே முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண முயற்சிப்பது வீண் வேலை எனக் கூறி இந்து அமைப்புகள் தெரிவித்தன. மத்தியஸ்தத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என இந்து மகாசபா தெரிவித்தது. அயோத்தி வழக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண உகந்த வழக்கு அல்ல என உத்தரப்பிரதேச மாநில அரசுத் தரப்பும் தெரிவித்தது. எனினும் இப்பிரச்னையில் சுமூக தீர்வு காண மத்தியஸ்தத்திற்கு தயார் என இஸ்லாமிய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் தெரிவித்தார்.
இருதரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதிகள், மத்தியஸ்தம் செய்ய தகுதியான நபர்கள் பட்டியலை சம்மந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கலாம் எனக் கூறி, அதுதொடர்பான உத்தரவு பிறப்பிப்பதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மத்தியஸ்திற்கான முடிவை நாளை வெளியடவுள்ளதாக நீதிமன்றத்தின் நோட்டீஸ் தெரிவித்துள்ளது. அந்த நோட்டீஸ்சில், “அயோத்தி மத்தியஸ்திற்கான உச்சநீதிமன்றத்தின் முடிவை நாளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பிரிவாக பிரித்து பயன்படுத்திக் கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.