இந்துக்களின் கட்டடம் இருந்த இடத்தில் பாபர் மசூதி இருந்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது.
எனினும் இந்த வழக்கில் மத்தியஸ்தம் தோல்வியடைந்தது. ஆகவே இந்த விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில்‘ராம் லல்லா விரஜ்மான்’ என்ற அமைப்பின் சார்பாக வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் வாதாடினார். அதில், “சர்சைக்குரிய அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் ஒன்று இருந்தது. இது தொடர்பாக இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பு ஆராய்ச்சி நடத்தியதில் இந்தப் பகுதியில் ஒரு பெரிய கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. மேலும் அந்தக் கட்டடம் இந்து மதத்திற்கு தொடர்பான கட்டடம் என்பதற்கான ஆதாரமும் உள்ளது. ஆகவே இந்தப் பகுதியில் இந்து கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.