வாகனத்துறையினரின் தவறான திட்டமிடலே வாகன விற்பனை சரிவுக்கு காரணம் என இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் வாகன உற்பத்தி தொழிலில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்கள் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் பணிகளை இழக்கும் நிலையும் உள்ளது. இதற்கு இந்திய மக்களிடையே வாகனங்கள் வாங்கும் திறன் குறைந்து காணப்படுவது ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல வாகனங்கள் உற்பத்தி துறையில் தனியார் முதலீடுகளும் சற்று குறைந்து காணப்படுவதும், ஜிஎஸ்டி வரியுமே காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வாகனத்துறையினரின் தவறான திட்டமிடலே வாகன விற்பனை சரிவுக்கு காரணம் என இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், வாகனத்துறையினரின் தவறான திட்டமிடலால் தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடி நிலையை உணர்ந்தும் அவர்கள் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்துள்ளனர். அது அவர்களின் தவறு. இதற்காக அரசை வரி குறைக்கச் சொல்வது நியாயமில்லை.
சிமெண்ட் நிறுவனங்களும் நெருக்கடியில் தான் இருக்கின்றன. நாட்டின் சூழலை உணர்ந்து நாங்கள் திட்டமிட்டு செயல்படுகிறோம் என தெரிவித்தார்.சில தினங்களுக்கு முன் பேசிய பஜாஜ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ், வாகன உற்பத்தி சரிவுக்கு அதிக உற்பத்தியே காரணம். ஜிஎஸ்டி குறைப்பு நெருக்கடியை சரி செய்யாது என தெரிவித்திருந்தார்.