இந்தியா

"அப்பாவை அடிக்காதீங்க!"- மாஸ்க் பிரச்னையில் தந்தையை அடித்த ம.பி போலீஸிடம் மன்றாடிய சிறுவன்

"அப்பாவை அடிக்காதீங்க!"- மாஸ்க் பிரச்னையில் தந்தையை அடித்த ம.பி போலீஸிடம் மன்றாடிய சிறுவன்

webteam

மாஸ்க் சரியாக அணியவில்லை என்று கூறி, தனது தந்தையை அடித்த போலீஸிடம் ஆட்டோ டிரைவரின் மகன் மன்றாடிய வீடியோ காட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மத்திய பிரதேச போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநில அரசும், மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்தியுள்ளதுடன், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் செவ்வாய்க்கிழமை கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டிருந்தனர் இரண்டு காவலர்கள். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா கெயர் என்ற 35 வயது ஆட்டோ ஓட்டுநர் தனது மகனுடன் தன்னுடைய ஆட்டோவில் காவலர்கள் நின்று கொண்டிருந்த வழியாக சென்றுகொண்டிருந்தார். உடல்நலம் குன்றிய தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு கிருஷ்ணா கெயர் அவசரமாக சென்றுகொண்டிருக்க, அவரை காவலர்கள் இருவரும் வழிமறித்துள்ளனர்.

அந்த நேரத்தில் கிருஷ்ணா கெயர் அணிந்திருந்த மாஸ்க் முறையாக இல்லாமல் சற்று கீழே இறங்கி இருந்துள்ளது. இதைப் பார்த்த காவலர்கள் `மாஸ்க் சரியாக அணியமாட்டாயா?' என்று கூறி ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணாவை காவல் நிலையம் அழைத்துள்ளனர். ஆனால், தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு அவசரமாக செல்ல வேண்டுமெனக் கூறி, காவலர்கள் அழைத்ததற்கு போக மறுத்துள்ளார் கிருஷ்ணா.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்கள் இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணாவை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். கிருஷ்ணாவின் மகன் கண்முன்னே அவரை இருவரும் கடுமையாக கீழே இழுத்து போட்டு அடித்து உதைத்துள்ளனர். அப்போது கிருஷ்ணாவின் மகன் அழுதுகொண்டே காவலர்களிடம் தந்தையை அடிக்க வேண்டாம் என மன்றாடி கேட்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.

வீடியோவில் கிருஷ்ணாவின் மகன் அழுதுகொண்டே காவலர்களிடம் மன்றாடுவதும், உதவிக்காக மற்றவர்களை அழைப்பதும் அவர்கள் யாரும் செல்லாமல் வேடிக்கை பார்க்கும் காட்சிகள் பார்ப்போரை உறைய வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ, காவலர்கள் இருவருக்கும் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து காவலர்கள் கமல் பிரஜாபத் மற்றும் தர்மேந்திரா ஜாட் ஆகிய இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.