இந்தியா

”இன்டெர்நெட்டை சரியாக பயன்படுத்திய ஆட்டோ டிரைவர்..” அப்படி என்ன செய்தார்?

”இன்டெர்நெட்டை சரியாக பயன்படுத்திய ஆட்டோ டிரைவர்..” அப்படி என்ன செய்தார்?

JananiGovindhan

இன்டெர்நெட் உலகம் மூலை முடுக்கெங்கிலும் பரவிக் கிடப்பதற்கு பெங்களூருவின் இந்த ஆட்டோ டிரைவரும் ஒரு காரணமாக இருக்கலாம். உபெரில் ஆட்டோ ஓட்டிக் கொண்டே முதலீடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான தரவுகளுக்கான யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார் ஜனார்தன்.

சுஷாந்த் கோஷி என்பவரது ட்விட்டர் பதிவு மூலம் தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் ஜனார்தன் பொதுவெளிக்கு தெரிய வந்திருக்கிறார். அதில், “இன்றைக்கான என்னுடைய உபெர் ஆட்டோ டிரைவர் ஒரு யூடியூப் இன்ஃப்ளூயன்சர். அதுவும் நிதி தொடர்பான பொருளாதார சிக்கல்களை, தரவுகளை தரக்கூடியவராக இருக்கிறார். இது ஒரு பீக் பெங்களூரு மொமன்ட்” எனக் குறிப்பிட்டு ஃபோட்டோவையும் பகிர்ந்திருக்கிறார் சுஷாந்த்.

அந்த ஃபோட்டோவில், ஆட்டோ டிரைவர் ஜனார்தன் தன்னுடைய ஆட்டோவில் “என்னுடைய Gold Janardhan Investor என்ற யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்” என ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் குறிப்பிட்டு பதாகையும் மாட்டியிருக்கிறார்.

அந்த யூடியூப் சேனலில் ஏன் வங்கிகள் ரூபாய் நோட்டுகளை அச்சிட கூடாது என்பது குறித்து தெளிவாக விளக்கியிருப்பதாக ஜனார்தனின் ஒரு வீடியோவையும் பகிர்ந்து பாராட்டி பதிவிட்டிருக்கிறார் சுஷாந்த் கோஷி.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “ஆட்டோ டிரைவர் ஜனார்தனின் யூடியூப் சேனலை பார்த்ததில் ரொம்பவே ஈர்த்துவிட்டார். சிக்கலான பொருளாதார டாபிக் பற்றியும், எப்படி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றியும் எளிமையாக விளக்கியிருக்கிறார். இதை வைத்து யூடியூப் மற்றும் உபெர் நிறுவனங்கள் ஒரு ஆய்வே நடத்தலாம்” என சுஷாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

இணையதளத்தை முறையாக பயன்படுத்தினால் எப்போதும் நன்மையே கிட்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக ஜனார்தன் இருக்கிறார் என சுஷாந்தின் ட்விட்டர் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.