டெல்லியில் ஆட்டோ, டாக்சி கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் கிலோமீட்டருக்கு ஐந்து ரூபாயும், ஏசி மற்றும் ஏசி அல்லாத டாக்ஸி கட்டணம் ரூபாய் 4 மற்றும் ரூபாய் 3 என உயர்ந்துள்ளது. டெல்லி மாநில அரசின் இந்த முடிவு, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில்கொண்டு விலையை உயர்த்த வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கட்டண உயர்வுக்கு பின் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆக உயர்ந்துள்ளது. மீட்டருக்கு ஒரு கிலோமீட்டர் கட்டணம் ரூ.9.50 லிருந்து ரூபாய் 11 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டாக்ஸியை பொருத்தவரை ஏசி அல்லாத வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 14 லிருந்து ரூபாய் 17 ஆகவும், ஏசி வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.16ல் இருந்து ரூ.20 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்டோவுக்கான அடிப்படைக் கட்டணம் திருத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கருப்பு மற்றும் மஞ்சள் டாக்ஸி, எக்கானமி டாக்ஸி மற்றும் பிரீமியம் டாக்ஸி ஆகியவற்றுக்கான கட்டணம் 9 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் பெரும்பாலான அவசரகால பொது போக்குவரத்தாக ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளது. இந்நிலையில் கட்டண உயர்வுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.