மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்பிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். கடந்த வாரம் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவ் மகள் கவிதாவும் இதே வழக்கில் கைதானார்.
இதே மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில், ஐதராபாத்தைச் சேர்ந்த அரபிந்தோ பார்மா லிமிடெட் (AUROBINDO PHARMA LIMITED) என்ற மருந்து நிறுவனத்தின் நிர்வாகியான சரத் சந்திரரெட்டி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவர் கைது செய்யப்பட்ட 4ஆவது நாளில் அதாவது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி, இவரது நிறுவனம் பாஜகவிற்கு 5 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளது தற்போது அம்லமாகியுள்ளது.
அதுமட்டுமன்றி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, 25 கோடி ரூபாயை பாஜக-வுக்கு நன்கொடை வழங்கியுள்ளது இவரது நிறுவனம். இது சரியாக, சந்திர ரெட்டி மதுபான கலால் வரி கொள்கை முறைகேட்டில் அப்ரூவலாக மாறிய பின் சில மாத இடைவெளியில் நடந்துள்ளது.
போலவே அரபிந்தோ பார்மா லிமிடெட் 52 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிலையில், அதில் 34.5 கோடி ரூபாயை பாஜகவிற்கு வழங்கியுள்ளதும் அம்பலமாகி உள்ளது.
பாரதீய ராஷ்டிரிய சமேதி கட்சிக்கு 15 கோடி ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டரை கோடி ரூபாயையும் தேர்தல் பத்திரம் மூலம் அரபிந்தோ பார்மா லிமிடெட் நிறுவனம் நன்கொடை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவையாவும் தற்போது பூதாகாரமாகியுள்ளது.