இந்தியா

சோறு தண்ணி இன்றி இரு குழந்தைகளை அறையில் பூட்டிவைத்து சித்ரவதை செய்த சித்தி

சோறு தண்ணி இன்றி இரு குழந்தைகளை அறையில் பூட்டிவைத்து சித்ரவதை செய்த சித்தி

kaleelrahman

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வேலை செய்து வரும் தமிழக தம்பதியினரின் இரண்டு சிறு குழந்தைகளை பல மாதங்களாக உணவு வழங்காமல் அறையில் பூட்டி வைத்து பெற்றோரே கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விருதாசலத்தை சேர்ந்த தங்கராஜ், மாரியம்மாள் தம்பதியினர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மாம்பாடு பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களது 4 மற்றும் 6 வயது குழந்தைகளை அவர்களது வீட்டில் உள்ள அறைக்குள் பூட்டுப் போட்டு அடைத்து வைத்திருந்தனர்.


இதுகுறித்து அவரது வீட்டின் அருகில் தங்கி உள்ள நபர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஊர்மக்கள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன், நேற்று அந்த வீட்டிற்குச் சென்று பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போத இரு குழந்தைகளும் பல மாதங்களாக உணவின்றி எழும்ப முடியாமல் உடலில் காயங்களுடன் தளர்ந்து கிடப்பதை பார்த்து ஊர்மக்களும் காவல் துறையினரும் இரு குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு பிஸ்கட் பால் போன்ற உணவுகளை வழங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதன் பிறகு ஊர்மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தங்கராஜ் மற்றும் மாரியம்மாளை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தங்கராஜின் முதல் மனைவிக்கு பிறந்த இந்த இரு குழந்தைகள் என்பதும் முதல் மனைவி இறந்த பிறகு மாரியம்மாளை திருமணம் செய்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இரு குழந்தைகளிடமும் போலீசார் விசாரித்தபோது தங்களுக்கு சரியாக உணவு தராமல் தங்களுடைய தாய் தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் தாயாருடன்போக விருப்பம் இல்லை என்றும் கூறினர். குழந்தைகளின் கண் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்களுடன் காணப்படும் இரு சிறு குழந்தைகளுக்கு தரமான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

இந்த குழந்தைகளின் பாதுகாப்பை அரசு குழந்தைகள் பாதுகாப்புத் துறை ஏற்றுள்ளது. இந்த குழந்தைகளை கொடுமைப்படுத்திய தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவி மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குழந்தைகளை கொடுமைப்படுத்திய இருவருக்கும் கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.