இந்தியா

கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு

webteam

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை நோக்கித் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என ஹிமாச்சல பிரதேச காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவர்கள், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில், கொரோனா பாதித்த பெண்ணை தனிமைப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் அழைத்துச் சென்றபோது, அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இமாச்சல பிரதேசத்தில், கொரோனா பாதிப்புள்ளவர்கள் யாரேனும் மற்றவர்களை நோக்கித் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்று எச்சிலை துப்பியதால் மற்றவருக்கு கொரோனா வந்தால் கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.