பைரன் சிங் எக்ஸ் தளம்
இந்தியா

மணிப்பூர் | முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்.. ஒருவர் காயம்!

Prakash J

மணிப்பூரில் பாஜக தலைமையிலான பைரன் சிங் ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 10) பைரன் சிங் மணிப்பூரின் கங்போபி மாவட்டம், கோட்லென் கிராமத்தின் அருகே சென்றபோது, அவரது பாதுகாப்புப் படையினரின் வாகனங்களின் மீது போராட்டக்காரர்கள் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில், பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் எல்லையோரம் அமைந்துள்ள கங்போபி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குக்கி தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் மாவட்டத்திற்குச் செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதையும் படிக்க: மத்திய அமைச்சரவையில் யார் யார்? பிரதமர் மோடி அளித்த தேநீர் விருந்து சொல்லும் செய்தி என்ன?

பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள நிலைமை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பாதுகாப்பு ஆலோசகரிடம் முதல்வர் கேட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் பைரன் சிங், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் கடும் கண்டனத்திற்குரியது. இது முதல்வர் மீதான நேரடி தாக்குதல், நேரடியாக மாநில மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விரைவில் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல மாத இறுதியில் இருபிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. அது, இன்றுவரை தொடர்கிறது.

இதையும் படிக்க: 'திடீர் கருணை மதிப்பெண் ஏன்?’- நீட் தேர்வு முறைக்கேடு; சரமாரி கேள்வி எழுப்பிய மருத்துவர்கள் அமைப்பு!