அதிகாரிகள் வாகனங்களின் மேல் தாக்குதல் நடத்திய கிராமத்தினர், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி pt web
இந்தியா

தெலங்கானா | முதல்வரின் தொகுதியில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்.. போலீசார் குவிப்பு - நடந்தது என்ன?

தெலங்கானா முதல்வரின் சொந்த தொகுதியில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்கச் சென்ற அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பி ஏற்பட்டது.

PT WEB

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கொடங்கல் எனும் சட்டமன்ற தொகுதி உள்ளது. இது அம்மாநில முதல்வர் ரேவேந்த் ரெட்டியின் சொந்த தொகுதியாகும். அந்தத் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், கொடங்கல் தொகுதியில் உள்ள லாகசரளா கிராமத்தில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்தி, மக்களது கருத்துக்களைக் கேட்க மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று அப்பகுதிக்கு சென்றனர்.

அதிகாரிகளின் வருகையை எதிர்பார்த்து தயாராக காத்திருந்த விவசாயிகளும் விவசாய சங்கத்தினரும் அதிகாரிகளைத் திரும்பிச் செல்ல வலியுறுத்தி கோஷம் போட்டனர். ஒருகட்டத்தில் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோரின் கார்களைச் சுற்றி வளைத்த விவசாயிகள் அவற்றின் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அதிகாரிகள் காரில் இருந்து இறங்காமல் அப்படியே வேக வேகமாக திரும்பிச் சென்றனர்.

இதனிடையே தாசில்தார் ஒருவரைப் பிடித்த விவசாயிகள் அவரைத் தாக்கிய சம்பவமும் அரங்கேறியது. இதன் காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.