இந்தியா

ஊரடங்கு எதிரொலி: ஏப்ரல் மாதத்தில் பாதியாக குறைந்த ஏடிஎம் பயன்பாடு

ஊரடங்கு எதிரொலி: ஏப்ரல் மாதத்தில் பாதியாக குறைந்த ஏடிஎம் பயன்பாடு

webteam

ஊரடங்கு உத்தரவை அடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது பாதியாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிக அளவில் வெளியே நடமாடவில்லை. குறிப்பாக, ஊரடங்கு முழுவீச்சில் அமல்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதத்தில் மக்கள் வீடுகளிலேயே இருந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை அடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது பாதியாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில், “பிப்ரவரி மாதம் ஏடிஎம்மில் ரூ. 2,86,463 பணம் எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ரூ.2,51,075 பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ரூ.1,27,660 மட்டுமே ஏடிஎம்மில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏப்ரல் மாதத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பயன்பாடு பாதியாக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீஸ் இயக்குநர் மற்றும் சிஇஓ ருஸ்தம் இரானி கூறும்போது, "மார்ச் கடைசி வாரத்திலும், ஏப்ரல் முழுவதிலும், ஏடிஎம் பரிவர்த்தனைகள் மிகப் பெரிய அளவில் குறைந்துவிட்டன. பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்படும்போது மக்கள் பணத்தை மிச்சப்படுத்த விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 2.4 லட்சத்திற்கும் மேலான ஏடிஎம்கள் இயங்குகின்றன. இதில் ஹிட்டாச்சி 55 ஆயிரம் ஏடிஎம்களை நிர்வகிக்கிறது. ஏடிஎம்களுக்கு சென்று பணத்தை ஏற்ற ஆட்கள் வேண்டும். தேவைப்பட்டால், ஒரு உதிரி பகுதிக்கு மாற்றீடு தேவை. ஊரடங்கின் போது பொறியாளர்களால் சென்று ஏடிஎம்களை சரிசெய்ய முடியவில்லை. அதனால் ஏடிஎம் இயங்காது. மக்கள் பணம் எடுப்பது கடினம்.

ஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டுள்ள. இயல்பு நிலைக்கு வர சிறிது காலம் ஆகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அந்த சிறிய காலம் எவ்வளவு விரைவாக என்பது யாருக்கும் தெரியாது. பொருளாதார நடவடிக்கைகள் திரும்பும்போது, மக்கள் முந்தைய செலவு பழக்கங்களுக்குச் செல்வார்கள் என நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.