நிழலுலக தாதா அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கடும் பதட்டம் நிலவுகிறது.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது மூன்று நபர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துள்ளதாக சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அத்திக், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகியோர் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லை என யோகி ஆதித்யநாத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த படுகொலை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். முதல்வர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து, படுகொலை விவகாரம் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகொலையில் ஈடுபட்ட மூவர் இளைஞர்கள் என்றும் அவர்கள் அங்கேயே போலீசாரிடம் சரணடைந்துவிட்டார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நபர்கள் எதற்காக கொலையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊடகத்தை சேர்ந்தவர்கள் போல மூன்று இளைஞர்களும் நடித்து, அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் அருகே நெருங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். போலீசார் அத்திக் மற்றும் அஷ்ரப் இருவரையும் பிரயாக்ராஜ் நகரில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது படுகொலை நடந்துள்ளது. ஆகவே சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் இருந்தனர்.
அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்களை பிடிக்க முயற்சித்த போது, அந்த இளைஞர்கள் தப்பிக்க முயற்சி செய்யவில்லை என்றும் அங்கே போலீசாரிடம் சரணடைந்ததாகவும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலையில் ஈடுபட்ட மூவரின் பெயர் சன்னி, லவ்லேஷ் மற்றும் அருண் என போலீசாருக்கு அந்த இளைஞர்கள் தகவல் அளித்துள்ளனர். அவர்களுடைய பின்னணி என்ன என்றும் படுகொலையில் ஈடுபட காரணம் என்ன என்றும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
ஊடகங்களை சேர்ந்தவர்கள் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. மொத்தம் 18 குண்டுகள் சுடப்பட்டதாகவும், அத்திக் அகமது மற்றும் அஷ்ரப் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் உத்திரப் பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரின் உடலும் பிரயாக்ராஜ் நகரில் உடற்கூறு முடிவடைந்த பிறகு அடக்கம் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட அத்திக் அகமது மகன் அஸத் அகமது உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் அத்திக் மற்றும் அஷ்ரப் உடல்களை அடக்கம் செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்