இந்திய அரசியலில் அழுத்தமாக தடம் பதித்த தலைவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய். ‘நாட்டின் பிரதமர் பதவியை ஒரு நாள் இவர் அலங்கரிப்பார்’ என்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவினால் புகழப் பெற்றவர். பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தி உள்ள குவாலியரில், கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் வாஜ்பாய். 1944 ஆம் ஆண்டு இவர் பொதுவாழ்க்கையில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். ஆர்ய சமாஜ்யத்திலும் ஆர்எஸ்எஸ்சிலும் தன்னை இணைத்துக்கொண்டு துடிப்புடன் பணியாற்றி வந்தார் வாஜ்பாய். பின்னர் சியாமா பிரசாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்யாயா உள்ளிட்டோருடன் இணைந்து பாரதிய ஜன சங் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அவசர நிலைக்குப் பின்னர், தனது நீண்டகால நண்பர்களான பைரோன் சிங் ஷெகாவத், எல்.கே. அத்வானி ஆகியோருடன் சேர்ந்து, 1980ல் பாரதிய ஜனதா கட்சியை வாஜ்பாய் தொடங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதில் வென்ற இருவரில் ஒருவர் வாஜ்பாய். இருப்பினும், அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது. சிறப்பான உரைகள் மூலம் சிறந்த நாடாளுமன்றவாதி என நிரூபித்தார்.
1996ம் ஆண்டு நடந்த 11ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வென்ற நிலையில் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், பெரும்பான்மையை திரட்ட இயலாத நிலையில் பதவியேற்ற 13 ஆவது நாளே பதவி விலகினார் வாஜ்பாய்.
அதன் பின்னர் 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஆகவே மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். இம்முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் வாஜ்பாய். ஆனால் 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை முழு 5 ஆண்டுகாலமும் அவர் பிரதமராக இருந்தார்.
வாஜ்பாய் நாட்டிற்கு ஆற்றிருக்கும் சீரிய பணிகளை போற்றும் வகையில் 2015 மார்ச் 27ஆம் நாளன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். அதன் பின்னர், வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி ஆண்டுதோறும் நல்லாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.